மயிலம் போலீஸ் நிலையத்துக்கு சென்ற 2 ரவுடிகள் வெட்டிக் கொலை

மயிலம் போலீஸ் நிலையத்துக்கு சென்ற 2 ரவுடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

Update: 2023-06-10 18:45 GMT

வானூர்:

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28). கோர்க்காடு பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (32). ரவுடிகளாக வலம் வந்த இவர்கள் கடந்த மார்ச் மாதம் மயிலம் பகுதியில் கஞ்சா விற்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் தினமும் காலை மயிலம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தனர். அதன்படி நேற்று 2 பேரும் பிள்ளையார்குப்பத்தில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் லிங்காரெட்டிபாளையம் வழியாக மயிலத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

சரமாரி வெட்டு

செங்கமேடு-திருவக்கரை சாலையில் சென்றபோது, 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை துரத்தினர். அசம்பாவிதம் ஏதோ நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த அவர்கள், அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிளை மின்னல் வேகத்தில் ஓட்டிச்சென்றனர்.

பின்னால் தொடர்ந்து விரட்டி வந்த அந்த கும்பல் ஒரு கட்டத்தில் அருண்குமார், அன்பரசன் சென்ற மோட்டார் சைக்கிளை இடித்து கீழே தள்ளினர். இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர்.

அப்போது அன்பரசனை சுற்றி வளைத்து அந்த கும்பல் சரமாரியாக வெட்டித் தள்ளியது. தலை, கழுத்து உடலில் பல்வேறு இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது. இதில் நிலைகுலைந்து போன அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே தப்பியோடிய அருண்குமாரையும் அந்த கும்பல் விரட்டியது. சுமார் 1 கி.மீ. தூரம் வரை சினிமா பாணியில் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர். அவர் இறந்ததை உறுதிசெய்த பிறகே அந்த கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பிச்சென்றது.

ஆட்கள் நடமாட்டம் மிகுந்த இந்த பகுதியில் சாலையில் ஓட ஓட விரட்டி 2 ரவுடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு பொதுமக்கள் திரண்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இந்த பயங்கர கொலை குறித்து தகவல் அறிந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் என்ன? முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழியாக நடந்ததா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனிப்படை அமைப்பு

புதுவை ரவுடிகள் கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் பிடிபட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. இதற்கிடையே தனிப்படை அமைக்கப்பட்டு தமிழகம், புதுச்சேரி பகுதியில் முகாமிட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் 2 ரவுடிகள் ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் புதுவை, தமிழக பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்