திருச்சியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய 2 ரவுடிகளை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்
திருச்சியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய 2 ரவுடிகளை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். காலில் குண்டடிப்பட்ட ரவுடிகளுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி,
திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர்கள் துரைசாமி (வயது 38), சோமசுந்தரம் (27) என்கிற சாமி. சகோதரர்களான இவர்கள் மீது கஞ்சா விற்பனை, கொள்ளை, ஆள் கடத்தல் மற்றும் 5 கொலை வழக்குகள் என மொத்தம் 69 வழக்குகள் உள்ளன.
ரவுடிகளான இருவர் மீது திருச்சி மாவட்டத்தில் மட்டும் 30 வழக்குகளும், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மீதி வழக்குகளும் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.
தனிப்படை
இவர்கள் இருவரும் கடந்த 2½ வருடங்களாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தனர். இந்த நிலையில் இவர்களை பிடிக்க உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் பதுங்கி இருப்பதாக நேற்று அதிகாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
ஆயுதங்கள், நகைகள் மறைத்து வைப்பு
பின்னர் அவர்களை உறையூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் துரைசாமி, சோமசுந்தரம் ஆகிய இருவரும் திருட்டு வழக்கில் தொடர்புடைய நகைகள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை திருச்சி மாநகரில் சில இடங்களில் மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தனர்.
இதில் குழுமாயி அம்மன் கோவில் அருகே நகை மற்றும் பணத்தை மறைத்து வைத்திருப்பதாக போலீசாரிடம் கூறினர். அதன் அடிப்படையில் அந்த நகைகளை மீட்க போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், முதல் நிலை காவலர்கள் சிற்றரசு, அசோகன் ஆகியோர் துரைசாமி, சோமசுந்தரம் ஆகியோரை நேற்று மதியம் குழுமாயி அம்மன் கோவில் பகுதிக்கு போலீஸ் ஜீப்பில் அழைத்து சென்றனர்.
போலீசார் மீது தாக்குதல்
அப்போது போலீசார் சற்றும் எதிர்பாராத நிலையில் துரைசாமி திடீரென போலீஸ் ஜீப்பை ஓட்டி வந்த போலீஸ் டிரைவர் அசோகனின் கழுத்தை பிடித்து தாக்கினார். மேலும் ஜீப்பின் ஸ்டீரிங்கை பிடித்து திருப்பினார்.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அருகில் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை ஜீப்பில் இருந்து எடுத்துக்கொண்டு துரைசாமியும், சோமசுந்தரமும் ஓடினர். இன்ஸ்பெக்டர் மோகன் உள்ளிட்ட போலீசார் அவர்களை விரட்டி சென்றனர்.
அப்போது துரைசாமி மற்றும் சோமசுந்தரம் ஆகிய இருவரும் போலீசாரை பட்டாக் கத்தியால் தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டர் மோகனுக்கு இடது கையிலும், போலீஸ்காரர் சிற்றரசுக்கு வலது கையிலும், போலீஸ் ஜீப் டிரைவர் அசோகனுக்கு இடது கையிலும் காயம் ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து இருவரும் போலீசாரை தாக்க முயன்றனர்.
துப்பாக்கி சூடு
இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மோகன் அவர்களை எச்சரிக்கை செய்யும் வகையில் தனது துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி ஒரு முறை சுட்டார். தொடர்ந்து அவர்கள் ஆக்ரோஷமாக கத்தியால் தாக்க முயன்றனர். இதனால் இன்ஸ்பெக்டர் மோகன் தங்களை தற்காத்துக்கொள்ள அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர்களது காலில் குண்டு பாய்ந்ததில் சரிந்து விழுந்தனர்.
துரைசாமிக்கு வலது காலிலும், சோமசுந்தரத்திற்கு இடது காலிலும் குண்டு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரசு ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரவுடிகள் தாக்கியதில் காயம் அடைந்த போலீசாரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த துரைசாமி, சோமசுந்தரம் ஆகியோரையும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு போலீசார் மற்றும் ரவுடிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரசு ஆஸ்பத்திரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருச்சியில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.