மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பலி

குடியாத்தம் அருகே நண்பனை பார்க்க மோட்டார்சைக்கிளில் சென்ற 2 பிளஸ்-1 மாணவர்கள் விபத்தில் பலியானார்கள்.

Update: 2023-08-09 12:34 GMT

பிளஸ்-1 மாணவர்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த நெல்லூர்பேட்டை ஊராட்சி லிங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். எல்லை பாதுகாப்புப் படை வீரர். இவரது மகன் துளசிதாஸ் (வயது 16). லிங்குன்றம் கிராமம் அருகே உள்ள ஜிட்டுவீட்டு பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார், மின்வாரிய ஊழியர். இவரது மகன் அருண் அரிபாலாஜி (16).

மாணவர்கள் இருவரும் குடியாத்தம் ெரயில்நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தனர். இருவரும் நண்பர்கள். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக சென்று வருவது வழக்கம்.

ஆடி கிருத்திகையை முன்னிட்டு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் நண்பர்களான துளசிதாஸ், அருண் அரிபாலாஜி ஆகிய இருவரும் குடியாத்தத்தில் உள்ள நண்பனை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை துளசிதாஸ் ஓட்டி வந்துள்ளார்.

2 பேர் பலி

குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் உள்ள குருபகவான் கோவில் அருகே சென்றபோது குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டு நோக்கி சிமெண்டு பாரம் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்துள்ளது. எதிர்பாராத விதமாக துளசிதாஸ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், மினிலாரியை உரசி கட்டுப்பாட்டை இழந்து, அந்த வழியாக நடந்து சென்ற லிங்குன்றம் அடுத்த மகாத்மா காந்தி நகரை சேர்ந்த அபிமன்யு (60) என்பவர் மீது மோதியதுடன், சாலை ஓரத்தில் உள்ள ஒரு கம்பத்திலும் மோதி கவிழ்ந்துள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த துளசிதாஸ், அருண் அரிபாலாஜி மற்றும் அபிமன்யூ ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களில் துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அருண் அரிபாலாஜி, அபிமன்யு ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அருண் அரிபாலாஜியை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.

போலீஸ் விசாரணை

இந்த விபத்து தொடர்பாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 மாணவர்கள் விபத்தில் இறந்த சம்பவம் கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்