பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை
பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு
திருச்சி உய்யகொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி சுமதி (வயது 40). இவர் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி காலை 7 மணி அளவில் உய்யகொண்டான் திருமலை வ.உ.சி.தெருவில் இருந்து எம்.எம்.நகர் நோக்கி நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை காட்டி சுமதி அணிந்து இருந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர்.
பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்றனர். உடனே சுமதியும், அங்கு நடைபயிற்சி சென்றவர்களும் கூச்சலிட்டனர். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து 2 பேரையும் பிடித்து அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட 2 பேரிடமும் விசாரித்தபோது அவர்கள், நாகப்பட்டினம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அசன்சாகுல்அமீது (42), திருச்சி விமானநிலைய பகுதியை சேர்ந்த அப்துல்ஹக்கீம் (44) என்பது தெரியவந்தது.
7 ஆண்டுகள் சிறை தண்டனை
இது குறித்து சுமதி அளித்த புகாரின்பேரில், அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் ஹேமந்த் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நீதிபதி சாந்தி நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில், "குற்றம் சாட்டப்பட்ட அசன் சாகுல்அமீது, அப்துல்ஹக்கீம் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்டதவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும்" விதித்து இருந்தார்.
--------------------------------
----
Reporter : M.NIZARUDEEN_Staff Reporter Location : Trichy - TRICHY