ஏற்காட்டில் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
எஸ்டேட் அதிபர்
சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியை சேர்ந்தவர் உஸ்மான்சேட் (வயது 70), எஸ்டேட் அதிபர். உஸ்மான் சேட், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ந் தேதி இரவு வீட்டில் தனது மனைவியுடன் இருந்தார். அப்போது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களுடன் அவரது வீட்டுக்குள் புகுந்தது. பின்னர் அவர்கள், உஸ்மான் சேட் மற்றும் அவரது மனைவியை கத்தியை காட்டி மிரட்டி 23 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இதுதொடர்பாக ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இந்த கொள்ளை தொடர்பாக ஏற்காடு சாலப்பாறை கிராமத்தை சேர்ந்த மணி (38), நாகலூரை சேர்ந்த சேகர் (57), செல்வம் (41), வாழவந்தி பகுதியை சேர்ந்த தங்கவேல் மற்றும் செங்காடு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (30) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
10 ஆண்டுகள் ஜெயில்
இந்த நிலையில் தலைமறைவான தங்கவேல் உள்பட 5 பேரும் விடுதி ஒன்றில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசார் வருவதை அறிந்து விடுதி மாடியில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்ற தங்கவேல் படுகாயம் அடைந்து இறந்து விட்டார். மற்ற 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணை சேலம் முதலாவது கூடுதல் சார்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த மணி, சேகர் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி விவேகானந்தன் தீர்ப்பு அளித்தார். செல்வம், ராமகிருஷ்ணன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.