கரடி தாக்கி 2 பேர் படுகாயம்

கொல்லிமலையில் கரடி தாக்கி 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-07-27 18:45 GMT

சேந்தமங்கலம்

கரடி தாக்கியது

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் வாழவந்தி நாடு ஊராட்சி கரையங்காடுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளி (வயது 70). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையல்காரராக வேலை பாா்த்து ஓய்வு பெற்றவர். இந்தநிலையில் காளி நேற்று காலை அந்த பகுதியில் உள்ள அடர்ந்த காடுகள் வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த கரடி திடீரென்று காளி மீது பாய்ந்து கடித்து குதறியது. இதில் முகம், கை, கால், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் அடைந்த அவர் அங்கிருந்து அலறி அடித்து ஓடிவிட்டார்.

அதேபோல அந்த பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (51). விவசாயி. இவர் வழக்கம்போல் தோட்ட வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த கரடி அவரையும் தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடி வந்து விட்டார்.

2 பேர் படுகாயம்

இதையடுத்து படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் செம்மேடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே செம்மேடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரையும், பொன்னுசாமி எம்.எல்.ஏ. மற்றும் வனத்துறையினர் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் 2 பேரை கடித்துக் குதறிய கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கரடி தாக்கி 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்