மணவாளக்குறிச்சி:
மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ. பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் சுலைமான் (வயது 52). இவர் மண்டைக்காட்டில் ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலை முடிந்து சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவருக்கு பின்னால் புதூர் சி.ஆர்.எஸ். நகரை சேர்ந்த சகாய பிரவின்குமார் (36) என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டர் எதிர்பாராமல் சுலைமான் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியினர் சுலைமானை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சகாய பிரவின்குமார் குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக மண்டைக்காடு போலீசார் சகாய பிரவின்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.