நிதி நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை
நெல்லையில் நிதி நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் நிதி நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிதி நிறுவன ஊழியர்
மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று நெல்லைக்கு வந்தனர். அவர்கள் 2 குழுக்களாக பிரிந்து சென்று வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
3 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் டவுன் கல்லணை தெருவில் உள்ள சதாம் உசேன் என்பவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் வரை நடந்தது. சதாம் உசேன் கேரளாவை சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். அவரிடம் சட்டவிரோத பண பரிமாற்றம் ஏதும் நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு அழைத்து சென்றனர்
பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகத்தின் பின்புறம் உள்ள செயின்ட் பால்ஸ் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (வயது 50) என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். தொழில் அதிபரான இவர் வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடமும் சட்டவிரோத பண பரிமாற்றம் ஏதும் நடைபெற்றதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கிய விசாரணை பிற்பகல் 2 மணிக்கு முடிவடைந்தது.
இதையடுத்து ராஜ்குமாரை அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். இந்த சோதனையின்போது, 2 பேரின் வீடுகள் அமைந்திருக்கும் பகுதியில் மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறையினர் நடத்திய இந்த சோதனையால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.