வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது

சிவகாசியில் வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-07 19:31 GMT

சிவகாசி, 

சிவகாசியில் வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சித்துராஜபுரம்

சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில் தேவிநகர் உள்ளது. இங்கு வசித்து வரும் பத்மநாபன், தனசேகரன், சிவக்குமார், சிவசிதம்பரம் ஆகியோர் தங்களது வீடுகளை பூட்டி விட்டு கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

இதை நோட்டமிட்ட மர்ம கும்பல் அதிகாலை நேரத்தில் பூட்டி இருந்த 4 வீடுகளிலும் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த பீரோக்களை உடைத்து நகைகளை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதில் பத்மநாபன் என்பவர் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில் அவர் வீட்டில் மட்டும் 90 பவுன் நகைகள் கொள்ளை போனதாக கூறப்பட்டது. இதுகுறித்து அவர் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தனிப்படை

இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார், செல்வராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளை சம்பவம் மற்றும் கொள்ளை முயற்சி நடைபெற்ற வீடுகளில் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது மற்ற கொள்ளை சம்பவங்களை காட்டிலும் இந்த கொள்ளை சம்பவத்தில் வீட்டின் பூட்டை வித்தியாசமான முறையில் உடைத்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஆராய்ந்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் கைது செய்யப் பட்டவர்களின் விவரங்களை சேகரித்தனர்.

2 பேர் கைது

விசாரணையில் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த சூர்யா (30), சிவா (27) ஆகிய 2 பேர் தான் சிவகாசி சித்துராஜபுரம் தேவி நகரில் உள்ள வீடுகளில் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து இவர்களை பிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர்.

அதன்படி அவர்களின் முகவரிகள் மற்றும் உறவினர்கள் விவரங்களை சேகரித்த தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் அவர்களை கைது செய்தனர். இவர்கள் தமிழகத்தில் ஈரோடு, காரைக்குடி, திருச்சி, வடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் இவர்கள் நகை மற்றும் ரொக்க பணத்துடன் தெலுங்கானா சென்று அங்குள்ள உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைவது வழக்கம் என விசாரணையில் தெரியவந்தது. பிடிப்பட்ட சூர்யா, சிவா ஆகியோரிடம் 25 பவுன் நகைகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. கொள்ளையர்களை பிடித்த சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்