மோட்டார் சைக்கிளை திருட முயன்ற 2 பேர் கைது
மோட்டார் சைக்கிளை திருட முயன்ற 2 பேர் கைது
காங்கயம்
காங்கயம் அருகே பொத்தியபாளையம், கல்லாங்காட்டுபுதூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது47). இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் அவரின் வீட்டின் முன்புறம் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனால் தங்கவேல் சந்தேகமடைந்து எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் முன்புறம் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமிகள் 2 பேர் திருடி எடுத்து சென்றுள்ளனர்.
இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த தங்கவேல் சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து மோட்டார் சைக்கிளை திருட முயற்சி செய்த 2 மர்ம ஆசாமிகளை பிடித்து காங்கயம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட 2 பேரும் காங்கயம் களிமேடு பகுதியை சேர்ந்த இளங்கோ (21), ரஞ்சித் (22) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடி செல்ல முயன்றதும் தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.