மூதாட்டி உள்பட 2 பேர் கொலை வழக்கில் 2 பேர் பிடிபட்டனர்

கோவை புறநகர் பகுதியில் நடந்த மூதாட்டி, சித்தவைத்தியர் ஆகிய 2 கொலை வழக்குகளில் 2 பேர் பிடிபட்டனர்.

Update: 2023-09-14 20:15 GMT
கோவை


கோவை புறநகர் பகுதியில் நடந்த மூதாட்டி, சித்தவைத்தியர் ஆகிய 2 கொலை வழக்குகளில் 2 பேர் பிடிபட்டனர்.


2 கொலைகள்


கோவை கணியூர் கங்காலட்சுமி தோட்டத்தை சேர்ந்த பாப்பா (வயது72) என்ற மூதாட்டி கடந்த மாதம் 31-ந்தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த 2 ஆசாமிகள், மூதாட்டியை அரிவாளால் வெட்டி 2 பவுன் தங்கநகையை கொள்ளையடித்துச்சென்றனர்.


இதேபோல் கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த சித்தவைத்தியர் செல்வமணி (வயது60) என்பவரை இதேபோல் கடந்த 11-ந்தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்து, ரூ.500 மற்றும் அவரது செல்போனை கொள்ளையடித்துச்சென்றனர்.

கொலையாளிகள் பிடிபடக்கூடாது என்பதற்காக கொலை நடந்த இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் சித்தவைத்தியரின் செல்போனை வீசிச்சென்றனர்.


2 பேர் கைது


இந்த 2 கொலைகள் தொடர்பாகவும் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. கொலை நடந்த பகுதிகளில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா, மற்றும் செல்போன்கள் மூலம் தனிப்படையினர் துப்புதுலக்கினர்.


இதுகுறித்து தனிப்படை போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-


இந்த கொலை தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த எஸ்.வேலு (வயது29), கோவை கே.ஜி. சாவடியை சேர்ந்த சஞ்சீவி (33) ஆகியோர் பிடிபட்டனர்.

இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கோவை சிறையில் ஏற்கனவே அடைக்கப்பட்டு இருந்த 2 பேரும் சிறையில் நண்பர்களாக பழகி உள்ளனர்.

சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த இவர்கள் 2 பேரும் பணம் நகைக்காக கொலை செய்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்