திட்டச்சேரி அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே அகரக்கொந்தகை பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளை மறித்து சோதனை மேற்கொண்டனர். அதில் 110 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. பின்னர் மோட்டார்சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் நாகூர் பழைய பெட்ரோல் பங்க் பகுதியை சேர்ந்த பாபு மகன் சாதிக் (வயது 20) என்பதும், இவர் காரைக்காலில் இருந்து கீழ்வேளூருக்கு சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாதிக்கை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது, பறிமுதல்
அதேபோல் சீயாத்தமங்கையில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆதலையூர் மேலத்தெருவை சேர்ந்த கருணாநிதி மகன் ஹரிஹரன் (23) என்பதும், இவர் ஆதலையூருக்கு மோட்டார் சைக்கிளில் 110 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து திட்டச்சேரி போலீசார் ஹரிஹரனை கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராய பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.