அரசு பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
கறம்பக்குடியில் அரசு பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 51 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
2 பேர் கைது
கறம்பக்குடி பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. அதன் பேரில் புதுக்கோட்டை தனிப்படை போலீசார் கறம்பக்குடி, மழையூர், ரெகுநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்ற தஞ்சாவூர் மாவட்டம் வெங்கரை கிராமத்தை சேர்ந்த முகமது அப்பாஸ் (வயது 39), கறம்பக்குடி வாணியத்தெருவை சேர்ந்த சேக்தாவூது, (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 51 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 பேர் மீது வழக்கு
மேலும் இதுதொடர்பாக கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் கறம்பக்குடி போலீசார் நடத்திய சோதனையில் புதுப்பட்டி மற்றும் கறம்பக்குடியில் 80 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மணிகண்டன், சாகுல்ஹமீது ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.