மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்களை வழிமறித்து தாக்கிய 2 பேர் கைது
கருவேப்பிலங்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்களை வழிமறித்து தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கருவேப்பிலங்குறிச்சி,
கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சாத்துக்குடல் மேல்பாதியை சேர்ந்த சாமிதுரை மகன் சீனு என்கிற அறிவுடைநம்பி (வயது 25), கோதண்டம் மகன் ஹரி கிருஷ்ணன் (20), தவமணி மகன் தனுஷ் என்கிற பாலமுருகன் (18), தியாகராஜன் மகன் சிவசங்கர் (17) ஆகிய 4 பேரும் மோட்டார் சைக்கிள்களில் ஆலிச்சிக்குடி ஊர் பகுதி வழியாக சத்தம் போட்டப்படி சென்று கொண்டிருந்தனர். இதைபார்த்த அப்பகுதியை சேர்ந்த 7 பேர் அவர்களை வழிமறித்து தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ஆலிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்த 7 பேரும், மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அறிவுடைநம்பி உள்பட 4 பேரும், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் சீனு, ஹரிகிருஷ்ணன், தனுஷ் ஆகிய மூன்று பேரும் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆலிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்த 7 பேர் மீது கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிர்வேல் மகன் பரமசிவம் (22), மணிகண்டன் (24) ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.