கொலை வழக்கில் தேடப்பட்ட 2 பேர் கைது

பல்வேறு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 வாலிபர்களை கும்பகோணத்தில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Update: 2022-10-09 20:29 GMT

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகர் லயன்கரை பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் ரமேஷ் (வயது 25). கும்பகோணம் செட்டி மண்டபம் தோப்பு தெருவை சேர்ந்த சரவணன் மகன் கணேஷ் (20). இவர்கள் 2 பேர் மீதும் கும்பகோணத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

சுற்றி வளைத்து கைது செய்தனர்

அவர்கள் 2 பேரையும் பிடிக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தனிப்படை அமைத்தார். அதன்பேரில் தனிப்படை போலீசார் 2 பேரையும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் ரமேசும், கணேசும் நேற்று முன்தினம் கும்பகோணம் செட்டி மண்டபம் அருகே காலில் காயத்துடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து 2 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேருக்கும் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கால்களில் காயம் ஏன்?

இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், கைது செய்யப்பட்ட 2 பேர் கால்களிலும் காயம் இருந்தது. அது எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. அவர்கள் மீது கும்பகோணத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. மேலும் பல போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்த அவர்களை தீவிரமாக தேடி வந்தோம். தற்போது போலீசார் பிடியில் சிக்கிக் கொண்டனர். அவா்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். அப்போது அவர்களுடன் மேலும் பலர் சிக்குவார்கள் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்