கொல்லங்கோடு:
நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புறம் கொல்லக்குடிவிளையை சேர்ந்தவர் பாபு (வயது 43). இவர் சரல்முக்கு பகுதியில் முடிவெட்டும் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காலை பாபு கடையில் இருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் (76) என்பவர் திடீரென கையில் கத்தியுடன் கடைக்குள் நுழைந்து பாபுவை குத்தினார். இதில், அவருக்கு கையில் கத்திக்குத்து விழுந்தது. மீண்டும் தங்கராஜ், பாபுவை குத்த முயன்றபோது அவர் விலகியதால் அங்கு வாடிக்கையாளராக இருந்த ஜெயன் என்பவர் மீது கத்திக்குத்து விழுந்தது. இதில், காயமடைந்த பாபு, ஜெயன் ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து பாபு கொடுத்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.