பேரூராட்சி தலைவி உள்பட 2 பேர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு
தூய்மை பணியாளரை அவதூறாக பேசியதாக பேரூராட்சி தலைவி உள்பட 2 பேர் மீது வன்கொடுமை சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி முனியம்மாள். இவர்கள் இருவரும் புதூர் பேரூராட்சியில் தனியார் அமைப்பின் கீழ் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் பேரூராட்சி தலைவி வனிதா, ஒப்பந்த பணியாளர் கருப்பசாமியை தனது சொந்த தோட்டத்தை சுத்தம் செய்ய வலியுறுத்தியதாகவும், இதற்கு மறுத்த அவரை சாதி குறித்து அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த கருப்பசாமி கடந்த 4 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்தார். அவருக்கு புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து கருப்பசாமியின் மனைவி முனியம்மாள் புதூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் புதூர் பேரூராட்சியில் ஒப்பந்த பணியாளர்களின் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் அழகர்சாமி, பேரூராட்சி தலைவி வனிதா ஆகியோர் தங்களை அதிகமான வேலை செய்ய சொல்லி தொந்தரவு செய்வதாகவும், அவதூறாக பேசுவதாகவும் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து பேரூராட்சி தலைவி வனிதா, மேற்பார்வையாளர் அழகர்சாமி ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.