அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்

டிராக்டரில் மாணவர்களை ஆபத்தான பயணம் செய்ய வைத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2022-10-20 18:45 GMT

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறனறிவு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்காக மேஜை, நாற்காலிகள் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தற்காலிகமாக வாங்கி பயன்படுத்தப்பட்டது.

தேர்வுகள் முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியிடம் மீண்டும் மேஜை, நாற்காலிகளை ஒப்படைக்க ஆலம்பூண்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஒரு டிராக்டரில் பொருட்களை ஏற்றி அனுப்பி வைத்தனர். அப்போது அந்த டிராக்டரில் மேஜை, நாற்காலிகளை பிடித்தவாறு 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.

2 பேர் பணியிடை நீக்கம்

அதாவது ஆலம்பூண்டியில் இருந்து சத்தியமங்கலம் வரை சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு டிராக்டரில் மேஜை, நாற்காலிகளை பிடித்தபடி நின்றுகொண்டே ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்தனர். இதனை சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவுசெய்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். அது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து டிராக்டரில் ஆபத்தான முறையில் மாணவர்களை பயணம் செய்ய வைத்தது தொடர்பாக ஆலம்பூண்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குமார், உடற்கல்வி ஆசிரியர் பழனி ஆகிய இருவரையும் துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா உத்தரவிட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடத்தவும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்