சமையல் மாஸ்டர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
கரூரில் வெவ்வேறு சம்பவத்தில் சமையல் மாஸ்டர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
சமையல் மாஸ்டர்
கரூர் கருப்பாயிகோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 62). இவர் ராயனூரில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளதால் அதனை அவரது மனைவி சுசிலா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட துரைராஜ் நேற்று முன்தினம் தான் வேலை பார்த்து வந்த ஓட்டலில் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து துரைராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து துரைராஜ் மனைவி கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல கரூர் அருகே உள்ள கடம்பங்குறிச்சியை சேர்ந்தவர் குமாரசாமி (57). இவர் ரத்த அழுத்தம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று நள்ளிரவு மருத்துவமனை வளாகத்தில் குமாரசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து குமராசாமி மகன் சந்திரகுமார் கொடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.