லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் உள்பட 2 பேர் சிறையில் அடைப்பு
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் உள்பட 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் உள்பட 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தின் 2-வது மாடியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் உள்ளது.
இங்கு குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராக தொண்டாமுத்தூரை சேர்ந்த தனலட்சுமி என்பவரும், சட்ட உதவியாளராக விசுவாசபுரத்தை சேர்ந்த கார்த்திக் பிரபு (வயது 39) என்பவரும் பணியாற்றி வந்தனர்.
இவர்கள் காப்பகத்தில் உள்ள ஒரு குழந்தையை வீட்டிற்கு அனுப்புவதற்கு அனுமதி சான்றிதழ் கொடுப்பதற்கு பெற்றோரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத குழந்தையின் பெற்றோர், கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு கூடுதல் சூப்பிரண்டு திவ்யாவிடம் புகார் அளித்தனர்.
சிறையில் அடைப்பு
அதன் பேரில் நேற்று முன்தினம் மாலை லஞ்ச ஒழிப்பு போலீ சார் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை கண்காணித்தனர். அப்போது ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்தை குழந்தையின் பெற்றோர் தனலட்சுமி, கார்த்திக் பிரபு ஆகியோரிடம் கொடுத்தனர்.
அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 பேரையும் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.
மேலும் அங்கு 3 மணி நேரம் சோதனை நடந்தது. பின்னர் பிடிபட்ட தனலட்சுமி, கார்த்திக் பிரபு ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.