சிறுமி கர்ப்பமான வழக்கில் பெண் உள்பட 2 பேர் போக்சோவில் கைது
சிறுமி கர்ப்பமான வழக்கில் பெண் உள்பட 2 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
சிறுமி கர்ப்பம்
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வருகின்றனர். இதனால் அவர்களது மகளான 17 வயது சிறுமி அவரது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். மேலும் அந்த சிறுமி அருகே வசிக்கும் திருமணமான ஒரு பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
மேலும் அந்த பெண்ணின் வீட்டிற்கு குன்னம் தாலுகா, கரம்பியம் கிராமத்தை சேர்ந்த முருகேசனின் மகனான டிரைவரான வசந்தராஜ்(30) அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது வசந்தராஜ், அந்த சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். அதற்கு அந்த பெண் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி தற்போது 2 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
போக்சோவில் கைது
இது குறித்து தகவலறிந்த சிறுமியின் சித்தி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா போக்சோ சட்டத்தின் கீழ் அந்த பெண்ணை கைது செய்து ஏற்கனவே திருச்சி மகளிர் சிறையில் அடைத்தார். இதேபோல் போக்சோ சட்டத்தில் வசந்தராஜை நேற்று கைது செய்த மகளிர் போலீசார், அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
சிறுமி பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். வசந்தராஜுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை, 2 ஆண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்தால் 181 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.