கார் மோதி வியாபாரி உள்பட 2 பேர் பலி
கோவை அருகே கார் மோதி வியாபாரி உள்பட 2 பேர் பலியானார்கள்.
கோவை
கோவை அருகே கார் மோதி வியாபாரி உள்பட 2 பேர் பலியானார்கள்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பழ வியாபாரி
கோவை அருகே உள்ள ஒத்தக்கால்மண்டபம் அசோக் ரெசிெடன்சி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 48). இவர் மலுமிச்சம்பட்டியில் பழக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ரவி நேற்று முன்தினம் இரவில் தனது கடையை பூட்டிவிட்டு, கடையில் வேலை செய்து வரும் ஊழியரான ராமன் (50) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை ரவி ஓட்டினார்.
கோவை-பொள்ளாச்சி சாலையில் மலுமிச்சம்பட்டி அருகே உள்ள தனியார் நிறுவனம் அருகே சென்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
தூக்கி வீசப்பட்டு பலி
இதில் தூக்கி வீசப்பட்ட ரவி மற்றும் ராமன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து செட்டிபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உயிரிழந்த 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.