வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலி

வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலியாகினர்.

Update: 2022-09-05 18:43 GMT

நத்தம் அருகே கோணப்பட்டியை சேர்ந்தவர் பிரதீப் பாண்டியன் (வயது 21). இவருடைய தந்தை திருப்பாண்டி. இவர், வேடசந்தூர் அருகே உள்ள தனியார் மில்லில் தங்கி வேலை பார்க்கிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பிரதீப் பாண்டியன் தனது தந்தையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வேடசந்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். திண்டுக்கல்-கரூர் நெடுஞ்சாலையில் காக்காத்தோப்பு பிரிவு அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே வேலூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிரதீப் பாண்டியனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான மதுரையை சேர்ந்த கனகலிங்கத்தை கைது செய்தனர்.

இதேபோல் பழனி அருகே உள்ள பனம்பட்டியை சேர்ந்த முருகசாமி மகன் கார்த்திக் (30). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் பனம்பட்டியில் இருந்து குருவன்வலசுக்கு சென்று கொண்டிருந்தார். குருவன்வலசு பகுதியில் அவர் வந்தபோது, எதிரே குமாரகவுண்டன்புதூரை சேர்ந்த தமிழ்செல்வன் (23) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதியது. இதில், கார்த்திக், தமிழ்செல்வன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திக் பரிதாபமாக இறந்தார். பின்னர் தமிழ்செல்வன் மேல்சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்