வாலிபர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை
விருத்தாசலம் பகுதியில் நடந்த தனித்தனி சம்பவத்தில் வாலிபர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
விருத்தாசலம்,
வாலிபர்
விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 35). இவரது மனைவி ஆஷா (21). தெய்வசிகாமணி அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் கோபமடைந்த ஆஷா கம்மாபுரம் அடுத்த சொட்டவனத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த தெய்வசிகாமணி, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டு சொட்டவனத்தில் உள்ள மனைவியை பார்க்க சென்றார். அப்போது அவர் அங்கு மயங்கி விழுந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தெய்வசிகாமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதியவர்
விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் பழைய காலனியை சேர்ந்தவர் அரசன் (60). சம்பவத்தன்று இவர் வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அரசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.