புகையிலை பொருட்கள் பதுக்கி விற்ற கடைக்காரர் உள்பட 2 பேர் கைது
கழுகுமலை அருகே புகையிலை பொருட்கள் பதுக்கி விற்ற கடைக்காரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கழுகுமலை:
கழுகுமலை அருகே கரடிகுளம் சின்னகாலனியில் உள்ள கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கழுகுமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் கரடிகுளம் சின்னகாலனியில் உள்ள கடையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 10 புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து கடைக்காரர் முருகன் (வயது 43) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கழுகுமலை வின்சென்ட் நகர் பகுதியை சேர்ந்த ஜோசப் மகன் ஆபிரகாம் (27) என்பவர் தனக்கு விற்பனைக்கு செய்ய புகையிலை பொருட்கள் கொடுத்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் ஆபிரகாமை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.