தம்பதி கொலையில் உறவினர் உள்பட 2 பேர் கைது

தூத்துக்குடியில் தம்பதி கொலையில் உறவினர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-26 18:45 GMT

தூத்துக்குடியில் தம்பதி கொலையில் உறவினர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

லாரி டிரைவர்

தூத்துக்குடி அண்ணாநகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் ராம்குமார் (வயது 44). லாரி டிரைவர். இவருடைய மனைவி மாரியம்மாள் (39).

இவருடைய அண்ணன் முருகேசன். இவர் அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். முருகேசனின் மனைவி முத்துசெல்வி, ராம்குமாரின் சீட்டு பணம் ரூ.5 லட்சத்தை மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் முருகேசன், ராம்குமாரை கொலை செய்ய முடிவு செய்து உள்ளார்.

தம்பதி வெட்டிக்கொலை

இந்த நிலையில் ராம்குமார் நேற்று முன்தினம் இரவில் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அவர் வீட்டின் அருகே வந்தபோது, அங்கு வந்த முருகேசன் உள்ளிட்ட 2 பேர் சேர்ந்து ராம்குமார் மீது மிளகாய் பொடியை தூவினர். பின்னர் மறைத்து வைத்து இருந்த அரிவாள், கத்தியால் அவரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ராம்குமார் பரிதாபமாக இறந்தார்.

பின்னர் முருகேசன் உள்ளிட்ட 2 பேரும் ராம்குமாரின் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த ராம்குமாரின் மனைவி மாரியம்மாளையும் அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மாரியம்மாளும் பரிதாபமாக இறந்தார். பின்னர் முருகேசன் உள்ளிட்ட 2 பேரும் தப்பி சென்றனர்.

உறவினர் உள்பட 2 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தம்பதி உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து முருகேசன் மற்றும் 18 வயது வாலிபர் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்