போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டர் உள்பட 2 பேர் கைது

கிணத்துக்கடவில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டர் உள்பட 2 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Update: 2022-10-16 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டர் உள்பட 2 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தனிப்படை போலீசார் கண்காணிப்பு

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிணத்துக்கடவில் இருந்து கொண்டம்பட்டி செல்லும் வழியில் ஆர்.எஸ். சாலை பகுதியில் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் திலக், குப்புராஜ் ஆகிேயார் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த 2 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், தேனி மாவட்டம் உத்தமபாளையம் நாராயணதேவன் பட்டியை சேர்ந்த கராத்தே மாஸ்டர் ராம்குமார்(வயது 32), தியாகி முகமது அலி ஜின்னா தெருவை சேர்ந்த கிஷோர் அகமது(33) என்பது தெரியவந்தது.

போதைப்பொருட்கள் பறிமுதல்

பின்னர் அவர்கள் வைத்திருந்த பையை வாங்கி பிரித்து பார்த்தபோது, அதில் விற்பனைக்காக 100 கிராம் போதை மருந்து, 17 போதை மாத்திரைகள், 19 போதை ஸ்டாம்புகள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் 2 பேரையும் அதிரடியாக கைது செய்து, பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டவர்களை பிடித்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டினார். மேலும் அவர் கூறுகையில், போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்