அரசு பஸ் டிக்கெட் பரிசோதகர் உள்பட 2 பேர் பலி

பழனியில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் அரசு பஸ் டிக்கெட் பரிசோதகர் உள்பட 2 பேர் பலியாகினர்.

Update: 2023-07-20 19:00 GMT

பழனியை அடுத்த வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கோதண்டபாணி (வயது 53). அரசு போக்குவரத்துகழக டிக்கெட் பரிசோதகர். நேற்று முன்தினம் இவர் மோட்டார் சைக்கிளில் ஆயக்குடி சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து திரும்பி கொண்டிருந்தார். வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பிரிவில் திண்டுக்கல் சாலையை கடக்க முயன்றபோது, அடிவாரத்தை சேர்ந்த ராகவேந்திரன் (23) என்பவர் ஓட்டி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கோதண்டபாணியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் கோதண்டபாணி படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோதண்டபாணி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாலிபர் சாவு

இதேபோல் கீரனூர் அருகே உள்ள நரிக்கல்பட்டியை சேர்ந்தவர் பூபதி (27). உரக்கடை வைத்துள்ளார். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் பழனிக்கு வந்துவிட்டு மீண்டும் நரிக்கல்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். மானூர் பைபாஸ் பிரிவில் வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு வாகனம், இவரின் மோட்டார் சைக்கிளில் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்