விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பலி: மலைப்பாதையில் லாரிகளை அதிக வேகத்தில் இயக்கினால் கடும் நடவடிக்கை-போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பலியானதையடுத்து மலைப்பாதையில் லாரிகளை அதிக வேகத்தில் இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.

Update: 2023-09-07 19:15 GMT

கோத்தகிரி

விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பலியானதையடுத்து மலைப்பாதையில் லாரிகளை அதிக வேகத்தில் இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.

ஆலோசனை கூட்டம்

ஊட்டி -மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி மொபட் மீது மோதியதில் சிறுமி உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதையடுத்து தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தியில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக நேற்று கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கடும் நடவடிக்கை

இந்த கூட்டத்தில் பங்கேற்ற இன்ஸ்பெக்டர் பதி பேசும்போது கூறியதாவது:- ஊட்டி மலைப்பாதையில் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. சரக்கு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் அதி வேகத்தில் இயக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. எனவே மலைப்பாதையில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களை மிகுந்த கவனத்துடன் இயக்க வேண்டும். மேலும் அதிக வேகத்தில் வாகனங்களை இயக்கக் கூடாது. சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களை அதிவேகத்தில் இயக்குவது தெரிய வந்தால், அதன் ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே விபத்துகள் ஏற்படாத வகையில் வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். இந்தக் கூட்டத்தில் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர் சங்கத்தினர், போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்