பழ வியாபாரி உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் பழ வியாபாரி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
பழனி குறிஞ்சிநகரை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (வயது 55). பழ வியாபாரி. நேற்று முன்தினம் இவர், பழனியில் இருந்து குறிஞ்சிநகர் பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கலிக்கநாயக்கன்பட்டி பிரிவு பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மோட்டார்சைக்கிள் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை அருகே உள்ள காடையனூரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (39). கூலித்தொழிலாளி. கடந்த 22-ந்தேதி இவர், அய்யலூர் சந்தையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு மொபட்டில் காடையனூருக்கு வந்து கொண்டிருந்தார். அய்யலூர்-எரியோடு சாலையில் கொம்பேறிபட்டி அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் அவரது மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பொன்னுச்சாமி படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தாா். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.