சிறுவன் உள்பட 2 பேர் பலி

வெவ்வேறு விபத்துகளில் சிறுவன் உள்பட 2 பேர் இறந்தனர்

Update: 2023-04-29 18:58 GMT

வெவ்வேறு விபத்துகளில் சிறுவன் உள்பட 2 பேர் இறந்தனர்.

விவசாயியின் மகன்

தா.பேட்டை அருகே துலையாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர், விவசாய வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஸ்ரீவர்ஷன் (வயது 4). நேற்று உறவினருடன் ஸ்ரீவர்ஷன் பழம் வாங்க சென்றுள்ளான். அப்போது ஜெம்புநாதபுரம் - தா.பேட்டை செல்லும் சாலையில் துலையாநத்தம் புது காலனி அருகில் உறவினர் பழம் வாங்கி கொண்டிருந்தபோது சிறுவன் ஸ்ரீவர்ஷன் திடீரென சாலையை கடக்க முயன்றுள்ளான்.

அப்போது அந்த வழியாக சென்ற கனரக லாரி மோதியதில் சிறுவன் படுகாயம் அடைந்தான். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிறுவனை முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஸ்ரீவர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து ஜெம்புநாதபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் ராஜீவ்காந்தி (35) என்பவரை கைது செய்தார்.

மற்றொரு விபத்து

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் புதுப்பாலத்தை சேர்ந்தவர் விஜயராகவன் (45). இவர் நேற்று இரவு திருச்சி- சேலம் நெடுஞ்சாலையில் மான்பிடி மங்கலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது அதே வழியில் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த விஜயராகவன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவெறும்பூர் விபத்தால் போக்குவரத்து பாதிப்பு

திருவெறும்பூர் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜா. இவர் பொன்மலை ெரயில்வே மருத்துவமனையில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். நேற்று மாலையில் இவர் திருவெறும்பூர் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொன்மலை ரெயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் திருவெறும்பூர் காலனியை சேர்ந்த லட்சுமணதாஸ் என்பவர் திருவெறும்பூர் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த 2 விபத்துகளும் அடுத்தடுத்து நடந்ததால் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்துகள் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்