வீட்டின் மீது நாட்டுவெடி வீசிய வழக்கில் சென்னையை சேர்ந்த 2 பேர் கைது

வாணியம்பாடியில் வீட்டின் மீது நாட்டு வெடி வீசிய வழக்கில் சென்னையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-14 18:43 GMT

நாட்டுவெடி வீச்சு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ெரயில்வே ஊழியர் சந்திரன். இவரது மனைவி இனியவள். சந்திரன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் குகன் சேலத்தில் ெரயில்வேயில் வேலைபார்த்து வருகிறார். வாணியம்பாடி மேட்டுபாளையம் பகுதியில் இனியவள் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 5-ந்் தேதி நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் இனியவள் வீட்டின் மீது கம்பி சுற்றப்பட்ட நாட்டு வெடியை வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், மின் விளக்குகள், மற்றும் கதவு உடைந்து சேதமானது.

ரூ.1 கோடி கடன்

இதுகுறித்து வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த சுப்புராஜ், பாலாஜி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை வானகரம் பகுதியில் வசித்து வரும் இனியவளின் மருமகன் ஜெகதீஷ், சென்னையை சேர்ந்த சுப்புராஜ், பாலாஜி, ரங்கராஜ் ஆகியோரிடம் கடனாக ரூ.1 கோடி கடன் வாங்கி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கடன் வாங்கியவர்களிடம் பணம் திருப்பி கொடுக்க முடியாததால் ஜெகதீஷ் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். அவர் வாணியம்பாடியில் மாமியார் வீட்டில் இருப்பார் என நினைத்து இனியவள் வீட்டின் மீது நாட்டு வெடி வீசியதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரங்கராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்