வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் சாவு
நெல்லை அருகே வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.
நெல்லை அருகே வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.
பெண் பலி
நெல்லை பாளையங்கோட்டை அருகே வி.எம்.சந்திரம் செயிண்ட் அந்தோணி நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் நந்தகோபாலன் (வயது 26). இவர் விருதுநகரில் புள்ளியியல் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது மனைவி திவ்யாவுடன் (25) பாளையங்கோட்டை மார்க்கெட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீடு திரும்பினர்.
நெல்லை- திருச்செந்தூர் சாலையில் ஆரோக்கியநாதபுரம் அருகே சென்றபோது பின்னால் வந்த வேன், எதிர்பாராதவிதமாக நந்தகோபாலன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நந்தகோபாலனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. திவ்யா படுகாயம் அடைந்தார். இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் திவ்யா இறந்தார்.
மற்றொரு விபத்து
நெல்லை அருகே கங்கைகொண்டான் ஆலடிபட்டியை சேர்ந்த பால்வியாபாரி மரியதாஸ் (55) தனது மகள் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக வளையல் வாங்க நேற்று முன்தினம் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். நெல்லை எஸ்.என்.ஹைரோட்டில் சென்றபோது பின்னால் வந்த லோடு ஆட்டோ, மரியதாஸ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்தார்.
இச்சம்பவங்கள் குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.