பாலாற்று தடுப்பணையில் மூழ்கி 2 பேர் பலி

வாணியம்பாடி அருகே பாலாற்று தடுப்பணையில் குளிக்க சென்ற பிளஸ்-2 மாணவன் உள்பட 2 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள்.

Update: 2022-10-09 16:05 GMT

வாணியம்பாடி அருகே பாலாற்று தடுப்பணையில் குளிக்க சென்ற பிளஸ்-2 மாணவன் உள்பட 2 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள்.

குளிக்க சென்றனர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த புல்லூர் பகுதியில் ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ளது. இங்கு வாணியம்பாடி நியூடவுன் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த இலியாஸ் அஹமத் (வயது 45), பிளஸ்-2 மாணவர் உஜேர் பாஷா (17), உவேஸ் அஹமத் (16), ராகில் பையஸ் (22) ஆகிய 4 பேர் குளிக்க சென்றுள்ளனர்.

தடை செய்யப்பட்ட பகுதியை கடந்து 4 பேரும் வனப்பகுதிக்குள் குளிக்கச்சென்றுள்ளனர். செல்லும் வழியில் அணையில் இறங்கிய போது கால் வழுக்கியதால் உஜேர் பாஷா அணையில் விழுந்து மூழ்கினார். இதனை தொடர்ந்து இலியாஸ் அஹமத் தண்ணீரில் குதித்து அவரை காப்பாற்ற முயன்ற போது அவரும் நீரில் மூழ்கினார்.

மாணவன் உள்பட 2 பேர் பலி

கண்முன்னே நீரில் மூழ்கியதை பார்த்த மற்ற இருவரும் செய்வதறியாது திகைத்து கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் விரைந்து சென்று அப்பகுதி மக்களுடன் இணைந்து நீரில் மூழ்கிய உஜேர் பாஷா மற்றும் இலியாஸ் அஹமத் ஆகியோரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். இருவரின் உடல்களையும் ஆந்திர மாநிலம் குப்பம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்