வனப்பகுதியில் பட்டாசு தயாரித்தபோது வெடித்துச்சிதறி காயம் அடைந்த 2 பேர் சாவு
சாத்தூர் அருகே வனப்பகுதியில் பட்டாசு தயாரித்தபோது வெடித்துச்சிதறி காயம் அடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
சிவகாசி,
சாத்தூர் அருகே வனப்பகுதியில் பட்டாசு தயாரித்தபோது வெடித்துச்சிதறி காயம் அடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
வனப்பகுதியில் வெடித்துச்சிதறியது
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மீனம்பட்டியை சேர்ந்தவர், ரகு (வயது 45), அதே பகுதியை சேர்ந்தவர் முகேஷ் (22). இவர்கள் இருவரும் சாத்தூர் அருகே சந்தையூர் வனப்பகுதியில் கடந்த வாரம் பட்டாசு தயாரிக்க மூலப்பொருட்களுடன் சென்றனர். அங்கு பட்டாசு தயாரித்தபோது மூலப்பொருள் கலவையில் உராய்வு காரணமாக வெடித்துச்சிதறியது.
இதில் ரகு, முகேஷ் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
2 பேர் பலி
இந்த வெடி விபத்து குறித்து அப்பையநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் 2 பேரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர். அவர்களது உடல்கள் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.