ஸ்கூட்டர் மீது கார் மோதியது;சிறுவன் உள்பட 2 பேர் பலி

புதுச்சத்திரம் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் 3 வயது சிறுவன் உள்பட 2 பேர் பலியாகினர். கோவிலுக்கு சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-04-07 18:45 GMT

ஸ்கூட்டர் மீது கார் மோதியது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லூர் அருகே உள்ள கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 52). இவர் சிமெண்டு தொட்டி, சிமெண்டு குழாய் மற்றும் தூண்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தார். சரவணன், அவரது சித்தப்பா ராமகிருஷ்ணனின் குடும்பத்தினருடன் மோகனூர் பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளார்.

அதன்படி இவர்களின் குடும்பத்தினர் நேற்று காலை காரில் மோகனூருக்கு புறப்பட்டு சென்றனர். அதே நேரத்தில் சரவணன் மற்றும் அவரது சித்தப்பாவின் பேரன் சிறுவன் சாய் பாலமித்ரனும் (3) சித்தப்பாவின் மருமகன் முத்துக்குமாரும்(34) ஸ்கூட்டரில் மோகனூருக்கு புறப்பட்டு சென்றனர்.

ஸ்கூட்டரை சரவணன் ஓட்டிச்சென்றுள்ளார்.

காலை 7 மணியளவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் தனியார் பள்ளி அருகே ஸ்கூட்டர் சென்றது. அப்போது பெங்களூருவில் இருந்து தேவகோட்டைக்கு சென்ற கார் ஒன்று ஸ்கூட்டரின் பின்னால் எதிர்பாராதவிதமாக மோதியது.

2 பேர் பலி

இதில் ஸ்கூட்டரில் வந்த சிறுவன் சாய் பாலமித்ரன் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் சிறுவன் சாய் பாலமித்ரன் மற்றும் முத்துக்குமாரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், சாய் பாலமித்ரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் முத்துக்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வழக்குப்பதிவு

இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், காரை ஓட்டி வந்த ஐ.டி. கம்பெனியின் முன்னாள் ஊழியரான தேவகோட்டையை சேர்ந்த ராஜேஷ் (40) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சத்திரம் அருகே கோவிலுக்கு சென்றபோது ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்