காதல் திருமணம் செய்த வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை

காதல் திருமணம் செய்த வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-03 20:09 GMT

மணப்பாறை:

காதல் திருமணம்

திருச்சி மாவட்டம், புத்தானத்தம் அருகே உள்ள கணவாய்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ்(வயது 23). இவரும், கணக்கபிள்ளையூரை சேர்ந்த அனிதா(20) என்பவரும் காதலித்து, கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டு, சிதம்பரத்தான்பட்டியில் வசித்து வந்தனர். கனகராஜ் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். அனிதா தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோல் நேற்று காலை வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கனகராஜுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் அனிதா வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அறை கதவு பூட்டி இருந்தது. இதையடுத்து கதவை உடைத்து பார்த்தபோது கனகராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் அங்கு வந்து, கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை

வையம்பட்டியை அடுத்த வத்தமணியாரம்பட்டியை சேர்ந்தவர் வடிவேல்(40). இவரது மனைவி ராஜேஷ்வரி(30). இவர் சீகம்பட்டியில் உள்ள அங்கன்வாடியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த வடிவேல், நேற்று மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் தான் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) தின்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து வடிவேலின் தந்தை ராஜூ அளித்த புகாரின்பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்