மதுரை நகரில் 17 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 2 பேர் கைது

போலீசார் நடத்திய வாகன சோதனையில் 17 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-26 19:57 GMT


போலீசார் நடத்திய வாகன சோதனையில் 17 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா விற்பனை

மதுரை மாநகரை கஞ்சா விற்பனை இல்லாத நகராக மாற்றுவதற்கு போலீசார் தனிக்கவனம் செலுத்தி செயல்பட்டு வருகின்றனர். மேலும் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் மதுரை மாநகர் முழுவதும் இரவு நேர ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது கஞ்சா என்ற போதை பொருளுக்கு பதிலாக போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.

அதன் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

வாகன சோதனை

இந்த நிலையில் தனிப்படை போலீசார் வைகை வடகரை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படியாக 3 நபர்கள் வந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோடினர். அவர்களில் மதுரை விக்கிரமங்கலம் பகுதியை சேர்ந்த தமிழ் அழகன் (வயது 19) என்பவரை போலீசார் பிடித்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் அண்ணா நகரை சேர்ந்த மருந்தாளுனரான முரளிராஜ் (27) என்பவரிடம் போதைக்கான தூக்க மாத்திரை மற்றும் வலி மாத்திரைகளை மொத்தமாக வாங்கி, அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் முரளி ராஜ் தங்கி இருந்த இடத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பல்வேறு வகைகளில் சுமார் 17 ஆயிரத்து 30 எண்ணிக்கையில் காலாவதியான மாத்திரைகளை போதை மாத்திரைகளும், 150 சிரப் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ் அழகன் மற்றும் முரளி ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்