அரசு பஸ் டிரைவர் கொலையில் 2 பேர் கைது
ராமநாதபுரத்தில் அரசு பஸ் டிரைவரை கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரத்தில் அரசு பஸ் டிரைவரை கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரசு பஸ் டிரைவர்
ராமநாதபுரம் கொத்ததெரு பகுதியை சேர்ந்தவர் செல்லம் என்பவரின் மகன் முகணன் (வயது 46). ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக நகர் பிரிவில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் சன்னதிதெரு பகுதியில் தலை மற்றும் முகம் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் பஜார் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இறந்த முகணனின் தங்கை சங்கரேஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முகணன் சன்னதிதெரு தர்மமுனீஸ்வரர் கோவில் பின்புறம் பகுதியில் மது அருந்தி உள்ளார். அப்போது அந்த பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்த புதுஅக்ரகாரம் ரோடு மாரீஸ்வரன் (41), கொத்ததெரு கருணாமூர்த்தி (44) ஆகியோர் பேசிக்கொண்டிருந்ததை கண்டுள்ளார். அவர்களுடன் பேச்சுக்கொடுத்த முகணன் ஒரு கட்டத்தில் மாரீஸ்வரனின் மனைவி குறித்து அவதூறாக பேசினாராம். இதனை மாரீஸ்வரன் கண்டித்துள்ளார்.
2 பேர் கைது
இதில் ஏற்பட்ட தகராறில் மாரீஸ்வரன் கையால் அடித்தபோது நிலைதடுமாறி முகணன் கீழே விழுந்தார்.. அப்போதும் ஆத்திரம் தீராத மாரீஸ்வரன் அருகில் கிடந்த கல்லை எடுத்து முகணனின் தலையில் போட்டுள்ளார். உடன் இருந்த கருணாமூர்த்தி மற்றொரு கல்லை எடுத்து முகணனின் தலையில் போட்டுள்ளார். இதில் தலை, முகத்தில் படுகாயமடைந்த முகணன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்ட 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி விவரம் அறிந்த போலீசார் மேற்கண்ட 2 பேரையும் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட முகணனுக்கு அபிராமி (39) என்ற மனைவியும், பவித்ரன் (17) என்ற மகனும், சாதனா (16) என்ற மகளும் உள்ளனர்.