சுங்கச்சாவடி காவலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது

சுங்கச்சாவடி காவலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-21 19:36 GMT

செந்துறை:

கொலை

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடியில் இருந்து கீழராயம்புரம் செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சாலையோரம் வாலிபர் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு, சட்டை எரிந்த நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அவரது உடலை ஆய்வு செய்தபோது கை, கால், தலை பகுதிகளில் ரத்த காயங்கள் இருந்தன. இதனால் அந்த வாலிபரை வேறு எங்கோ கொலை செய்து தடயங்களை மறைக்க உடலை இங்கே கொண்டு வந்து போட்டு எரிக்க முயன்றது தெரியவந்தது. கரும்பு சக்கை மற்றும் கருவேலம் முட்களை போட்டு எறித்ததால் உடல் முழுவதும் எறியாமல் சட்டையின் ஒரு பகுதி மட்டுமே எரிந்து இருந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

இதில் கொலை செய்யப்பட்ட வாலிபர் அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் வல்லரசு என்ற சுரேஷ்குமார்(வயது 23) என்பதும், இவர் கடந்த 10 நாட்களாக திருச்சி சிதம்பரம் சாலையின் மணகதி சுங்கச்சாவடியில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள் என்று வீடு மற்றும் சுங்கச்சாவடியிலும், அவரது செல்போனை வைத்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

மேலும் இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், காமராஜ் ஆகிய 2 பேரையும் பிடித்து கைது செய்து, விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-

செல்போன் திருட்டு

கொலை செய்யப்பட்ட காவலாளி சுரேஷ்குமார் மற்றும் மணிகண்டன், காமராஜ் ஆகிய 3 பேரும் நண்பர்கள். 9 மாதங்களுக்கு முன்பு மது குடிக்கும் போது காமராஜ் செல்போனை சுரேஷ்குமார் திருடி உள்ளார். இதனைக் கண்டு பிடித்து பலமுறை கேட்டு உள்ளனர். ஆனால் சுரேஷ்குமார் செல்போனை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் 3 பேரும் மது குடிக்க ஆனந்தவாடி டாஸ்மாக் கடைக்கு வந்து உள்ளனர்.

சென்னிவனம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மது குடித்து உள்ளனர். அப்போது மது போதையில் மீண்டும் செல்போன் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், காமராஜ் ஆகியோர் கயிறால் சுரேஷ்குமார் கழுத்தை இறுக்கி அங்கிருந்த கொட்டகையில் தூக்கில் தொங்க விட்டு கொன்றனர். பின்னர் கைகளை கட்டி இருசக்கர வாகனத்தில் தூக்கி வந்து சாலையோரம் வீசிவிட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு சுரேஷ்குமாரிடம் இருந்த செல்போனை எடுத்து கொண்டு தப்பி சென்றனர்.

இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்