ரூ.23 லட்சத்துக்கு யானை தந்தத்தை விற்க முயன்ற 2 பேர் கைது

வேலூரில் ரூ.23 லட்சத்துக்கு யானை தந்தத்தை விற்க முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Update: 2022-12-14 18:07 GMT

வேலூரில் ரூ.23 லட்சத்துக்கு யானை தந்தத்தை விற்க முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

யானை தந்தம்

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் (வயது 39). ஜெயக்குமார் (38). சதீஷ்குமார் மீது வனத்துறையில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. அவர் வன விலங்குகள் தொடர்பான பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். எனவே அவரை சென்னை வனத்துறை தலைமையிட வனவிலங்குகள் மீதான குற்றத் தடுப்பு பிரிவு வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் சதீஷ்குமாரிடம் யானை தந்தம் ஒன்று உள்ளதாகவும், அதை அவர் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் விற்க முற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

பிடிக்க நடவடிக்கை

இதை அறிந்த சென்னை தலைமையிட வனத்துறை அதிகாரிகள் சதீஷ்குமாரின் செல்போன் எண்ணை வைத்துக்கொண்டு அவர் செல்லும் இடங்களை கண்காணித்து அவர்களை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.

அதன்படி அவர்களிடம் யானை தந்தத்தை விலைக்கு வாங்குவது போன்று வனத்துறையினர் சதீஷ்குமாரை தொடர்பு கொண்டனர். அப்போது சதீஷ்குமார் வேலூரில் இருப்பதாகவும், வேலூர் வந்து யானைத்தந்தத்தை பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்தார்.

இதனையடுத்து சென்னையில் இருந்து வனத்துறை அதிகாரிகள் வேலூர் வந்தனர். அவர்கள் வேலூர் வனத்துறையினர் உதவியுடன் இருவரையும் பிடிப்பதற்கான நாடகத்தை செயல்படுத்தினர்.

2 பேர் கைது

அவர்களிடம், தாங்கள் சாத்துமதுரை பகுதியில் இருப்பதாகவும், அங்கு வந்து யானை தந்தத்தை பெற்றுக் கொள்ளுமாறும் சதீஷ்குமார் உள்ளிட்ட இருவரும், வனத்துறையினரிடம் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து வனத்துறையினர் சாதாரண உடையில் அங்கு சென்றனர். இருவரும் வனத்துறையினரிடம் யானைத் தந்தத்தை விற்பது தொடர்பாக பேசியபோது, அங்கு மறைந்திருந்த வனத்துறையினர் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

ரூ.23 லட்சம்

அவர்களிடமிருந்து 20 கிலோ எடை கொண்ட ஒரு யானை தந்தத்தையும், காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து, வேலூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.மேலும் இதுதொடர்பாக சிலரை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கைது செய்யப்பட்ட இருவரும் யானை தந்தத்துடன் அதை விற்பனை செய்ய பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தோம். ரூ.23 லட்சம் கொடுப்பதாக பேரம் பேசி வேலூரில் இருவரையும் கைது செய்துள்ளோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்