டிரைவரை மிரட்டிய 2 பேர் கைது

அரசு பஸ்சை வழிமறித்து டிரைவரை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-07 01:00 GMT

நிலக்கோட்டை அருகே உள்ள ஒட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜெயகாந்தி (வயது 50). அரசு பஸ் டிரைவர். நேற்று முன்தினம் இரவு இவர், திண்டுக்கல்லில் இருந்து நிலக்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ்சை ஓட்டி சென்றார். நிலக்கோட்டையை அடுத்த செங்கோட்டை பிரிவு அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது 2 பேர் திடீரென பஸ்சை வழிமறித்தனர். பின்னர் கண்இமைக்கும் நேரத்தில் தாங்கள் வைத்திருந்த கத்தியை காட்டி டிரைவரை மிரட்டி பணம் கேட்டு தகராறு செய்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் ஒன்று திரண்டு சத்தம் போட்டனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஜெயகாந்தி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் ஜெயகாந்தியிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியது செங்கோட்டையை சேர்ந்த இமானுவேல் (29), அஜய்குமார் (22) என்று தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத் தலைமையிலான தனிப்படையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்