ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக தொடர்ந்து ஏராளமான ஆடுகள் திருட்டு போனது. மேய்ச்சலுக்கு விடப்பட்ட ஆடுகளில் சில ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று வந்தனர். இதுதொடர்பாக ஆடுகளின் உரிமையாளர்கள் பல்வேறு இடங்களில் தேடி கடைசியில் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இதைதொடர்ந்து பல இடங்களில் ஆடுகள் காணாமல் போனதை தொடர்ந்து ஆடு திருடும் கும்பலை பிடிக்க ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இந்த தனிப்படையினர் ஆடு திருடும் கும்பலை தீவிர விசாரணை மேற்கொண்டு கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறியதாவது:-
ஆடு திருடும் கும்பல் தொடர்பாக முக்கிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து அவர்களை மடக்கி கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி காரைக்குடி மாத்தூர் சாத்தையா மகன் செல்வராஜ் (வயது 55), காரைக்குடி கண்டனூர் ரோடு அழகர்சாமி மகன் ஆறுமுகம்(50) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் காரில் சென்று ஆடுகளை திருடி வந்தது தெரிந்து காரை பறிமுதல் செய்துள்ளோம். பிடிபட்டவர்கள் ஆடுகளை திருடி விற்பனை செய்து விட்டனர். அவர்களிடம் தொடர் விசாரணை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.