கோவில்-கடையில் திருடிய 2 பேர் கைது
கடையம் அருகே கோவில்-கடையில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சூச்சி. வில்லுப்பாட்டு கலைஞர். இவரது மனைவி செல்வி. இவர்கள் பாப்பான்குளம் மெயின் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று இரவு மர்மநபர்கள் அந்த கடையின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த ரூ.450 மற்றும் பழத்தார் ஆகியவற்றை திருடி உள்ளனர். மேலும் அருகில் உள்ள இசக்கி அம்மன் கோவிலிலும் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்று உள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆழ்வார்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பாப்பான்குளம் அருகே உள்ள செல்லப்பிள்ளையார்குளம் மேற்கு தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் காளிராஜ் (வயது 23), அவரது நண்பர் கீழத்தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (21) ஆகியோர் ஆட்டோவில் சென்று பெட்டிக்கடை மற்றும் கோவிலில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.