மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
ஆற்காட்டில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்சுருதி உத்தரவிட்டார்.
அதன்பேரில் துணை போலிஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையினான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஆற்காட்டை சேர்ந்த ஜெயசந்திரன் (வயது 22), வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (20) ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் இருவரும் சேர்ந்து ஆற்காடு பகுதிகளில் இருந்து மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது
மேலும் அவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.