குடிபோதையில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

வால்பாறையில் குடிபோதையில் அரசு பஸ் டிரைவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-08 20:30 GMT


வால்பாறை


வால்பாறையில் குடிபோதையில் அரசு பஸ் டிரைவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-


குடிபோதையில் தகராறு


வால்பாறை அருகே உள்ள சோலையாறு எஸ்டேட் முதல் பிரிவைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 29), மாணிக்கா எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் டேனியல் சுந்தர்சிங் (23). நண்பர்களான இவர்கள் 2 பேருக்கும் மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் சம்பவத்தன்று ரஞ்சித்குமாரும், டேனியல் சுந்தர்சிங்கும் குடிபோதையில் வால்பாறை ஸ்டேன்மோர் சந்திப்பு பகுதியில் நின்று தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது பொள்ளாச்சியில் இருந்து சேக்கல்முடி எஸ்டேட்டுக்கு அரசு பஸ் வந்தது.


அந்த பஸ்க்கு வழிவிடாமல் ரஞ்சித்குமாரும், டேனியல் சுந்தர்சிங்கும் சாலையில் நின்று கொண்டிருந்தனர்.


அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்


அப்போது பஸ்சில் இருந்த கண்டக்டர் கருப்பசாமி, 2 பேரிடமும் பஸ்சுக்கு வழிவிட்டு ஓரமாக நிற்கும் படி கூறினார். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அரசு பஸ் டிரைவரான பொள்ளாச்சி கரையாஞ்செட்டிபாளையத்தை சேர்ந்த பெருமாளும் (38), குடிபோதையில் நின்றுகொண்டிருந்த வாலிபர்களை கண்டித்தார்.


இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள், அரசு பஸ் டிரைவரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


2 பேர் கைது


இதுகுறித்து பெருமாள் வால்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து, குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட ரஞ்சித் குமார், டேனியல் சுந்தர்சிங் ஆகியோரை கைது செய்தனர்.


பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்