சென்னை அண்ணா சாலையில் ரூ.4 லட்சம் போதை 'ஸ்டாம்ப்' பறிமுதல் 2 பேர் கைது

சென்னை அண்ணாசாலையில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள போதை ‘ஸ்டாம்ப்' பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-12 22:13 GMT

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி, அண்ணாசாலை பகுதிகளில் 'சிந்தெடிக் டிரக்ஸ்' எனப்படும் 'ஸ்டாம்பு' வடிவிலான போதைப்பொருட்களை சிலர் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக சென்னை மாநகர கூடுதல் போலீஸ் கமிஷனர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் போலீசார் போதைப்பொருள் வியாபாரிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் அண்ணா சாலை பார்டர் தோட்டம் பகுதியில் நின்ற இருவரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

அவர்களை போலீசார் சோதனையிட்டபோது, 'ஸ்டாம்ப்' வடிவிலான போதைப்பொருட்களை வைத்திருந்தனர். மொத்தம் 200 'ஸ்டாம்பு'கள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

2 பேர் கைது

அவர்களிடம் மேலும் நடத்திய விசாரணையில், அண்ணா சாலை பார்டர் தோட்டத்தைச் சேர்ந்த முகமது ரியாஸ் அகமது (வயது 30) என்பதும், திருவொற்றியூரை சேர்ந்த முகமது ஈசா (26) என்பதும் தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவர்கள், சாப்ட்வேர் என்ஜினீயர்களை குறிவைத்து இந்த போதைப்பொருளை விற்பனை செய்வதாகவும், ஒரு ஸ்டாம்பினை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,500 வரை விற்பனை செய்வதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை ஸ்டாம்புகளின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

கைது செய்யப்பட்ட 2 பேரின் குற்றப்பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்