சின்னசேலம் அருகே 2 பெண்டாட்டிக்காரர் தற்கொலை
சின்னசேலம் அருகே 2 பெண்டாட்டிக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சின்னசேலம்,
சின்னசேலம் அடுத்த மேலூர் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 43). விவசாயி, இவருக்கு செல்வி, பார்வதி என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி செல்விக்கு ஷாலினி என்ற மகளும், 2-வது மனைவி பார்வதிக்கு நித்திஷ் என்ற மகனும் உள்ளனர். பார்வதி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இதனால் முதல் மனைவி செல்வியுடன் ஆறுமுகம் வசித்து வந்தார். சம்பவத்தன்று செல்வி கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தில் உள்ள தனது அண்ணன் ஜெயக்குமார் மகனின் காதணி விழாவிற்கு சென்று விட்டார். தனிமையில் இருந்த ஆறுமுகம் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆறுமுகத்தின் தந்தை முருகன் சின்னசேலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடும்ப பிரச்சினை காரணமாக ஆறுமுகம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.