ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்
ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட 2 அரசு அதிகாரிகள் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
நாகா்கோவில்:
ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட 2 அரசு அதிகாரிகள் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அரசு அதிகாரிகள்- மோசடி
குமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தில் அய்யப்பன், ஜெயபழனி ஆகியோர் இளநிலை செயலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் சாந்தபுரம் பேயோடு சந்திப்பு பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகனிடம், ஆவினில் புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார் வந்தது.
இதுதொடர்பாக நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் போலீசார் அய்யப்பன், ஜெயபழனி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பணியிடை நீக்கம்
இதற்கிடையே சம்பந்தப்பட்ட அய்யப்பன், ஜெயபழனி ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. அதன்படி சென்னையில் உள்ள பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் அறிவுரைப்படி அய்யப்பன் மற்றும் ஜெயபழனி ஆகியோர் குமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் இருந்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த தகவலை ஆவின் பொது மேலாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.