சென்னை விமான நிலையத்தில் புதிதாக 2 விரைவு 'டாக்ஸிவே' பாதைகள் செயல்பாட்டுக்கு வந்தன

சென்னை விமான நிலையத்தில் புதிதாக 2 விரைவு ‘டாக்ஸிவே’ பாதைகள் செயல்பாட்டுக்கு வந்தன. முதலில் வந்த விமானங்களுக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2023-05-19 08:03 GMT

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பெரிய ரக பயணிகள் விமானங்கள் வந்து தரை இறங்குவதற்கு முதலாவது விமான ஓடு பாதையும், சிறிய ரக விமானங்கள் தரை இறங்குவதற்கு 2-வது விமான ஓடுபாதையும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த 2 விமான ஓடுபாதைகளையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதலாவது பிரதான ஓடுபாதையை விமானங்கள் புறப்பாட்டுக்காகவும், 2-வது ஓடுபாதையை விமானங்கள் தரை இறங்குதல் மற்றும் சிறிய ரக விமானங்கள் புறப்பாடு ஆகியவற்றுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக ஓடுபாதைகளில் தரைஇறங்கும் விமானம் அதில் இருந்து விரைவாக வெளியேறி நடைமேடைக்கு செல்லும் வகையில் மொத்தம் 4 'ரேபிட் எக்ஸிட் டாக்ஸிவே' பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாதை, 'டாக்ஸிவே'க்கும், விமான ஓடுபாதைக்கும் இடையில் இருக்கும் பகுதி. தற்போது பிரதான ஓடுபாதையில் ஒரு மணி நேரத்தில் 30-க்கும் அதிகமான விமானங்கள் கையாளப்படுகின்றன. அடுத்தடுத்த விமானங்கள் உடனடியாக தரையிறங்க வசதியாக இந்த பாதைகள் பயன்படுத்தப்படும்.

இதில் 2 'ரேபிட் எக்ஸிட் டாக்ஸிவே' பாதை அமைக்கும் பணிகள் முழுமையடைந்துள்ளன. இதையடுத்து 'இசட்' மற்றும் 'டி' ஆகிய 2 விரைவு 'டாக்ஸிவே' பாதைகள் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தன. இதில் 'இசட்' பாதையில் தரையிறங்கும் விமானங்கள் 'டாக்ஸிவே'க்குள் செல்வதற்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது. 'டி' பாதை விமானங்கள் உள்நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த 2 புதிய விரைவு 'டாக்ஸிவே' பாதைகளில் முதலில் வந்து தரை இறங்கிய விமானங்களுக்கு இரு பக்கங்களிலும் 2 தீயணைப்பு வாகனங்கள் நின்று கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்